ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில்அகழாய்வு பணிகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் 32 குழிகள் தோண்டப்பட்டதில் 62-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது இரும்பு பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது மண்வெட்டி என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர். சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் மண்வெட்டி பயன்படுத்தி விவசாயம் செய்துள்ளனர் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆதிச்சநல்லூ ரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைய உள்ள இடத்தை தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில்ராஜ் பார்வையிட்டார். திருச்சி மண்டல மத்திய தொல்லியல் துறை இயக்குநர் அருண்ராஜ், ஆய்வாளர் எத்திஸ்குமார், வருவாய்கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஆய்வு மாணவர்கள் முத்துக்குமார், குமரேசன், மணிகண்டன் உடனிருந்தனர்.