கன்னியாகுமரி ரவுண்டானாவில் அடிப்படை வசதிகள் கோரி உண்ணாவிரதம் இருந்த தலித் உரிமைகள் அமைப்பினர் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுற்றுலா பயணிகள் அதிகமா னோர் வரும் கன்னியாகுமரியில் மகாதானபுரத்தில் உள்ள ரவுண்டானாவில் அடிக்கடி ஏற்படும் விபத்து, உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் உடனடியாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும், தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும், போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும், கண்காணிப்பு கேமரா முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், வேகத்தடை அமைத்து விபத்துக்களை தடுக்கவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு அமைப்பின் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் தினகரன் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார்.
அனுமதி இல்லாததால் போலீஸார் போராட்டம் நடத்தியவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத்தினார். ஆனால், தொடர்ந்து போராட்டம் நடத்த முயன்றதால் தினகரன் உட்பட 37 பேரை கன்னியாகுமரி போலீஸார் கைது செய்தனர்.