தமிழகம்

திமுகவும் அதிமுகவும் ஊழலில் சகோதரத்துவம் வாய்ந்த கட்சிகள்: திரிபுரா மாநில முதல்வர் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்வதில் சகோதரத்துவம் வாய்ந்த கட்சிகள் என்று திரிபுரா மாநில முதல்வர் மாணிக்சர்க்கார் தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.சின்னத்துரையை ஆதரித்து கந்தர்வக்கோட்டையில் நேற்று இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

கடந்த 10 ஆண்டுகள் மத்தியில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியின்போது 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதன்பிறகு, வந்த பாஜக அரசில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 26 சதவீதமாக அதிகரித்துள்ளது.

100 நாட்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்டு தலா ஒருவருக்கு ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படுமென்ற வாக்குறுதியை பாஜக அரசு ஏன் நிறைவேற்றவில்லை.

நாட்டில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் 10 சதவீதமே உள்ள வரி ஏய்ப்பு செய்யக்கூடிய, பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்ற கட்சிகளாகவே உள்ளனவே தவிர, 90 சதவீதம் உள்ள ஏழை, எளிய மக்களை கண்டுகொள்ளவில்லை.

இரு கட்சி ஆட்சிகளில் நிர்வாகத் திறமையின்மையால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. உணவுப் பாதுகாப்பில் உத்திரவாதம் இல்லை. இத்தகைய இரு கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திமுகவும், பாஜகவுக்கு ஆதரவாக அதிமுகவும் செயல்படுகிறது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் மீது பல ஊழல் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இரண்டு கட்சிகளும் ஊழல் செய்வதில் சகோதரத்துவமாக செயல்படுகின்றன. எனவே, தமிழகத்தில் மக்களைச் சீரழித்துள்ள மதுவை ஒழிக்க திமுக, அதிமுகவால் முடியாது. எனவே, இந்த இரு கட்சிகளுக்கு மாற்றாக 6 கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT