திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சீருடைகளை வழங்கிய அமைச்சர் எ.வ.வேலு. 
தமிழகம்

சுயநலம் பார்க்காமல் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம்: உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை

செய்திப்பிரிவு

சுயநலம் பார்க்காமல் மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் செயல்பட வேண்டும் என பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.

நகராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்களுக்கான பாராட்டு விழா திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சி தலை வர்களும், நகரின் வளர்ச்சிக்கு போட்டி மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். மக்களிடம் வரிப்பணத்தை பெற்று, மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. நகராட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. தமிழக அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்பு தேவை. அரசிடம் நிதியை பெற்று, மக்களின் தேவையை அறிந்து செயல்பட வேண்டும். மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சிறப்பாக செயல்படும் நகராட்சிதான் வளர்ச்சி அடையும். அதனால்தான், உள்ளாட்சியில் உள்ள பிரச்சினைகளை முழுமையாக அறிந்து, சிறப்பான பல்வேறு திட்டங்களை தீட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஓராண்டில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

திருவத்திபுரம் நகர வளர்ச்சிக்கு நகர்மன்ற கவுன்சிலர்கள் அனை வரும் பாகுபாடின்றி மக்கள் பணியை செவ்வனே செய்ய வேண்டும். திருவத்திபுரம் நகராட்சியில் உள்ள 23 உறுப் பினர்களும் ஒன்றாக சேர்ந்து செயல்பட்டால்தான், நகர மன்றம் வளம் பெறும். வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை உறுப்பினர்கள் சரியாக செய்து கொடுக்க வேண்டும். மக்களின் மனநிலையையும், தேவையும் அறிந்து, அவர்களது பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணியாற்ற வேண்டும். சுயநலம் பார்க்காமல், மக்கள் நலமே முக்கியம் என்ற அடிப்படையில், நகராட்சி தலை வருக்கு ஒத்துழைப்பு அளித்து செயல்பட வேண்டும்.

மேலும், திருவத்திபுரம் நகராட்சி வளர்ச்சியடைய ஆணையாளர் உள்ளிட்ட ஊழியர்கள், நகராட்சி தலைவருடன் இணைந்து, நகர பகுதியின் தேவைகளை அறிந்து, கோப்புகளை விரைவாக தயார் செய்து, அரசுக்கு முன்மொழிவை அனுப்பி வைக்க வேண்டும். அப்போதுதான், நகராட்சிக்கு பல நல்ல திட்டங்கள் வந்து சேர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்கலாம்” என்றார்.

இதையடுத்து, திருவத்திபுரம் நகராட்சியில் பணியாற்றும் 44 தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடைகளை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார்.

SCROLL FOR NEXT