குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை தரிசனம் செய்தனர்.
வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கெங்கையம்மன் கோயில் தேர் திருவிழா நேற்று கோலாகலகமாக தொடங்கியது. இதையொட்டி, கோயிலில் கெங்கையம்மனுக்கு நேற்று சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, கெங்கையம்மன் உற்சவம் சிறப்பு அலங்காரத்துடன் தேரில் நிறுத்தப்பட்டது. கோபலாபுரத்தில் தொடங்கிய தேர் திருவிழாவில் குடியாத்தம் சட்டப்பேரவை உறுப்பினர் அமலு விஜயன், வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், நகராட்சி தலைவர் செளந்தர ராஜன், துணைத்தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து விழாவை தொடங்கி வைத்தனர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் தேர் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெறுவதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாவிளக்கு தீபம் ஏந்தி அம்மனுக்கு தீபாராதனை காண்பித்ததுடன் உப்பு, மிளகை தேர் மீது தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர். தேர் திருவிழாவையொட்டி வழியில் ஆங்காங்கே மோர் பந்தல் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இன்று சிரசு திருவிழா
கெங்கையம்மன் திருவிழாவில் முக்கிய நிகழ்வான சிரசு திருவிழா இன்று நடைபெறவுள்ளது. தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிரசு இன்று அதிகாலை புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை காலை 9 மணிக்கு அடையும். அதன் பிறகு கோயில் மண்டபத்தில் உள்ள சண்டளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டு கண் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்வார்கள்.
இதனை தொடர்ந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்படும் மாலை அம்மனுக்கு அணிவிக் கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப் படும். சிரசு திருவிழா பாதுகாப்பு பணியில் 1,200 காவலர்கள் ஈடுபடவுள்ளனர்.