தமிழகம்

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தேர்தல் நடத்த இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி சென்னையைச் சேர்ந்த கபடி வீரர் திருவேல் அழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கபடி விளையாட்டு குறித்து போதிய நிபுணத்துவம் இல்லாதவர்கள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் பதவியில் இருந்து வருகின்றனர். இந்த பதவியில் காலவரையின்றி பொறுப்பாளர்கள் இருப்பதால் சங்கம் முறையாக செயல்பட முடியாது சூழல் உள்ளது.

இதனால், திறமையான வீரர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. விளையாட்டு சங்கங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. எனவே உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஆனால் இந்த விதிமுறைகளை பின்பற்றாமல் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு வரும் 22-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், முறையாக தேர்தல் நடத்தப்படும் வரை சங்கத்தை நிர்வகிப்பதற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத்திற்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT