தேர்தல் நேரத்தில் மட்டுமே எம்ஜி ஆரை நினைப்பவர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.
திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்த அவர், அரியமங்கலம் காமராஜர் நகரில் பேசியது: திமுகவும் காங்கிரஸும் ஊழல் கட்சிகள் என்கிறார் ஜெய லலிதா. ஆனால், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல், திமுக தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் ஏதாவது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை சென்றனரா? ஆனால், நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறை சென்ற ஒரே தலைவர் ஜெயலலிதாதான். நீதிபதியின் தவறான கணக்கால் அவர் வெளியே வந்துவிட்டார். ஆனால், உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கு தீர்ப்பு வந்த பிறகு அவர் மீண்டும் சிறை செல்வது உறுதி.
தேர்தல் நேரத்தில் மட்டுமே எம்ஜிஆரை நினைப்பார். பிற நேரங்களில் மறந்து விடுவார். கருணாநிதி ஆட்சியில் முதலிடத்தில் இருந்த தமிழகம் தற்போது அதல பாதாளத்துக்குச் சென்று கொண் டிருக்கிறது. மக்களை மயக்க நிலையில் இருக்கச் செய்ய வேண் டும் என்பதற்காகவே மதுக்கடை களை சந்துக்கு சந்து திறந்து வைத்துள்ளார்.
மக்களைச் சந்தித்தால்தான் அவர் களின் பிரச்சினைகள் தெரியும். ஆனால், சென்னை மழை, வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப் பட்டபோதுகூட வேனை விட்டு இறங்காமல் வாக்காளப் பெரு மக்களே என்று பேசியவர்தான் ஜெயலலிதா.
கடமையில் இருந்து தவறிய பொறுப்பற்ற முதல்வர் அவர். இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு மற்றும் மேற்கு தொகுதியில் இளங்கோவன் பிரச்சாரம் செய்தார்.