பாஜக தலைவர் அண்ணாமலை ஆக்கப்பூர்வமாக அரசியல் செய்யவில்லை, என்று அமைச்சர் பி.மூர்த்தி குற்றம்சாட்டினார்.
மதுரை மாவட்டம் செட்டிக்குளம் ஊராட்சியில் அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார். விழாவில் 897 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பி.மூர்த்தி வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிச் சென்றபோது 6 1/2 லட்சம் கோடி கடனை விட்டு சென்றநிலையில் இந்த நிதி நெருக்கடியை தமிழக அரசு சமாளித்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேருக்கு ரூ.300 கோடிக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. பழைய ஒய்வூதிய திட்டம், நீட் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் படிபடியாக நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அரசு மூலம் மக்களுக்குச் செய்ய வேண்டிய நன்மைகளைச் செய்துவிட்டு அரசியல் செய்ய வேண்டும். எதுவுமே செய்யாமல் தமிழக அரசு எதைச் செய்தாலும் குற்றம், குறை சொல்வதில் நியாயமே இல்லை.
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக மாற்றினார்கள். அந்த வேலைக்கே மத்திய அரசு நிதி இன்னும் ஒதுக்கவில்லை. அண்ணாமலை ஆக்கப்பூர்வமாக அரசியல் செய்யவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்து எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்த மருத்துவமனையைக் கட்டுவதற்கு அதிமுக அரசும், மத்திய அரசும் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.