தமிழகம்

சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை: கோடை வெயிலில் இருந்து தப்பித்த மக்கள்

செய்திப்பிரிவு

சென்னையில் கடந்த 2 நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழையால் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தப்பித்தனர்.

சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழை காரணமாக இந்த ஆண்டு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்காது என மக்கள் நினைத்தனர். ஆனால் அதற்கு மாறாக கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னையில் வெயில் கொளுத்தியது. 109 டிகிரி வரை வெயில் காய்ந்ததால் உஷ்ணம் அதிகரித்து, மக்கள் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 2 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சூடு தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. மழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தயார்நிலையில் மீட்புக் குழு

மழை காரணமாக தெருக்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். சில இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு மேற்பார்வையில் கடலோர கமாண்டோ படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, சைலேந்திர பாபு கூறும்போது, வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளுக்கு மீட்பு குழுவினர் விரைந்து சென்று மக்களை காப்பாற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வர். மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்து அதன் மூலம் உயிரிழப்புகள் நிகழ்வதற்கான ஆபத்து உள்ளது. எனவே சாலையோரங்கள் அனைத்திலும் மீட்புக் குழுவினர் தயாராக உள்ளனர். மரங்களை அறுப்பதற்காக பெரிய இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. விலங்குகள் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

SCROLL FOR NEXT