காரைக்காலில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன், மாவட்ட துணை ஆட்சியர் எம்.ஆதர்ஷ் ஆகியோருடன்ஆலோசனை மேற்கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் 
தமிழகம்

இலங்கையில் உள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்: புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் நம்பிக்கை 

வீ.தமிழன்பன்

காரைக்கால்: இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று(மே 13) காரைக்கால் வந்த புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தங்கும் விடுதியில் பல்வேறு துறை அதிகாரிகளுடன், காரைக்கால் வளர்ச்சிக் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில் மாவட்ட துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ்(வருவாய்), எஸ்.பாஸ்கரன்(பேரிடர் மேலாண்மை), மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ஆர்.லோகேஸ்வரன், மண்டல காவல் கண்காணிப்பாளர் ஏ.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ''காரைக்காலில் உள்ள பழைய நீதிமன்றக் கட்டிடத்தை சீரமைத்து அதில், வட்டாட்சியர் அலுவலகம், பதிவுத்துறை அலுவலகம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த வருவாய் துறை சார் அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்காலில் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்றடையவில்லை. குறிப்பாக வங்கிக் கடனுதவிகள்
கிடைக்கவில்லை. இது குறித்து வங்கியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் சுமூக நிலை ஏற்பட்டப் பின்னர், அங்கு பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக, புதுச்சேரி மீனவர்களின் விசைப்படகுகளை மீட்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு பாதுகாப்பாக பிரதமர் நரேந்திர மோடி என்றும் இருப்பார்.'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT