சென்னை: அரசுப் பள்ளி மாணவிகளின் மேற்படிப்புக்கு மாதம் ரூ.1,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு, மாணவிகளின் பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், தற்போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவிகள், கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் மற்றும் ஐடிஐ-க்களில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம் வரும் கல்வி ஆண்டு (2022-23) முதல் அமல்படுத்தப்படும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில், மேற்படிப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவிகளின் பட்டியல் சேகரிப்பு பணி தொடங்கப்பட்டுள்து. அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளில், அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தவர்களின் விவரங்களை அனுப்புமாறு, அனைத்து பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகளுக்கு உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.
புதிய கல்வி ஆண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டதும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று உயர்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.