உதகை ரோஜா பூங்காவில் மலர்ந்துள்ள ரோஜா மலர்கள். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

உதகை ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் 4,000 ரக மலர்கள்

ஆர்.டி.சிவசங்கர்

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த 7-ம் தேதி கோடை விழா தொடங்கியது. வரும் 14, 15-ம் தேதிகளில் ரோஜா பூங்காவில் 17-வது ரோஜா காட்சி நடக்கிறது. தற்போதுஇந்த பூங்காவில் 4,000 ரகங்களில் சுமார் 30,000 ரோஜா செடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ரோஜா பூங்காவை திறந்து வைத்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவாக அவரது பெயரில் பூங்காவின் நுழைவுப் பகுதியில் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இந்த செடிகளில் தற்போது இளம் சிவப்பு ரோஜாக்கள் மலர்ந்துள்ளன. பூங்காவின் சிறப்பம்சமான பச்சை ரோஜாக்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்துச் செல்கின்றனர்.

கண்காட்சிக்கு தயாராகும் பூங்கா

ரோஜா காட்சியின்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், நீலகிரி தோட்டக்கலைத் துறை சார்பில் பல வண்ண ரோஜா மலர்களைக் கொண்டு நுழைவு வாயிலில் அலங்கார வளைவு அமைக்கப்படவுள்ளது. பல வண்ண ரோஜா கொய்மலர்களைக் கொண்டு பல்வேறு அலங்காரங்கள் வடிவமைக்கப்பட உள்ளன. கோவை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தோட்டக்கலைத் துறை சார்பில் பல வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வடிவங்கள், காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

சிறந்த ரோஜா தோட்டங்கள், பூந்தொட்டிகளில் வளர்க்கப்படும் ரோஜாக்கள், ரோஜா ரகங்கள் சேகரிப்பு, கொய்மலர் ரோஜா வகைகள், வணிகரீதியான ரோஜா இனங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவன பூங்காக்களில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா மலர்களின் மாலைகள், ரோஜா இதழ்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் பார்வையாளர்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT