தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், சென்னையில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
இத்தேர்தலில் எல்லா அரசியல் கட்சிகளும் சில்லறை வணிகத்தை காப்போம், அந்நிய முதலீட்டை தடுப்போம் என வாக்குறுதி அளித்திருப்பதை எங்கள் பேரவை வரவேற்கிறது. ஆன்லைன் வணிகத்தை தடை செய்வது என்பது மத்திய அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு என்றாலும், தமிழகத்தில் ஆன்லைன் வர்த்தகத்தை அனுமதிக்க மாட்டோம். உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியே வரும் வரை ஓயமாட்டோம். இதற்காக மத்திய அரசுக்கு எல்லா விதத்திலும் நெருக்கடி கொடுப்போம் என வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.
இவ்வாறு வாக்குறுதி அளிக்காத பட்சத்தில், அந்தந்த தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் ஒழுக்கத்தை பார்த்து வணிகர்கள் வாக்களிக்க வேண்டும். குறிப் பாக விவசாயம், சில்லறை வணிகத்தை காக்க விவசாயிகள், வணிகர்களுடன் இணைந்து நின்று போராடியவர்கள், இயற்கைவளச் சுரண்டலை துணிந்து எதிர்த்த வர்கள், மதுபானம், மணல் கொள் ளையர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளாதவர்கள், ஜாதி, மத அரசியல் பேதங்களைக் கடந்து மக்களுக்கு உதவியர்கள் ஆகியோருக்கு வணிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு வெள்ளையன் கூறினார்.