தமிழகம்

கபாலீசுவரர் உட்பட 7 கோயில்களின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டை முடிக்காமல் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு

செய்திப்பிரிவு

சென்னை: மயிலாப்பூர் கபாலீசுவரர், பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் உள்ளிட்ட 7 கோயில்களின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையை முடிக்காமல் சென்னை மெட்ரோ ரயிலின் 4-ம் வழித்தட திட்டத்தை செயல்படுத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ஜி.கவுதமன், பி.ஆர்.ரமணன், எஸ்.விஜய் நாராயணன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: சென்னை மெட்ரோ ரயில் 4-ம் திட்டப்பணியாக சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை ரயில் பாதை அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த வழித்தடத்தில் மயிலாப்பூரில் கபாலீசுவரர் கோயில், வடபழனியில் முருகன் கோயில், வெங்கீஸ்வரர் கோயில், அழகர் பெருமாள் கோயில், விருகம்பாக்கத்தில் சுந்தர வரதராஜப்பெருமாள் கோயில், வளசரவாக்கத்தில் வேல்வீஸ்வரர் கோயில், பூந்தமல்லியில் வரதராஜப் பெருமாள் கோயில் குளம் ஆகியவை உள்ளன.

மெட்ரோ ரயில் 4-ம் திட்டத்தின் வழித்தடத்தில் உள்ள சாந்தோம் தேவாலயம், ரோசரி தேவாலயம் உள்ளிட்டவை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்பட்டுள்ளன. ஆனால் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த புராதனச் சிறப்புமிக்க இந்த 7 கோயில்களும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளுக்கு பரிசீலிக்கப்படவில்லை.

மெட்ரோ முதல் கட்டப்பணிகள் நடந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் விக்டோரியா அரங்கம் போன்ற புராதன கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சுரங்கம் தோண்டப்பட்டு மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது. அதேபோல மெட்ரோ ரயிலின் 4-ம் திட்டத்தையும் இந்த கோயில்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.

மேலும் 100 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களின் பட்டியலை தயாரித்து புராதனக் கட்டிடங்களாக அறிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதன்படி இந்த கோயில்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்படவில்லை என்பதால் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை.

பூந்தமல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கப்படும் இடம் கோயிலுக்கு அருகே இருப்பதால் தேர்த்திருவிழா உள்ளிட்ட கோயில் உற்சவங்களுக்கு பாதிப்பு ஏற்படும். மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தும்போது அரசு மற்றும் தனியார் நிலங்களை விட்டுவிட்டு கோயில் நிலங்களே கையகப்படுத்தப்படுகிறது.

எனவே, மெட்ரோ ரயிலின் 4-ம் திட்டப்பணிகளால் பாதிக்கப்படும் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் உள்ளிட்ட 7 கோயில்களையும் புராதனக் கோயில்களாக அறிவிக்க வேண்டும். அத்துடன் இந்த கோயில்கள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் மெட்ரோ ரயில் திட்டப்பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT