தமிழகம்

வானிலை தொடர்பான அறிவிப்புகளுக்காக யூ டியூப் சேனல் தொடங்கி சாதனை படைக்கும் மாணவர்: ஒரு லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்

சு.கோமதிவிநாயகம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே உள்ள சென்னையம்பட்டியைச் சேர்ந்த சின்னமாரியப்பன் - உமாதேவி தம்பதியின்மகன் முத்துச்செல்வம்(19). தேனி அருகே கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் படித்து வருகிறார். இவர் கடந்த 2020-ம்ஆண்டு மே 15-ம் தேதி வானிலைகுறித்த தகவல்களை மக்களுக்கு வழங்கும் வகையில் வெதர்மேன் என்ற யூ டியூப் சேனலைத் தொடங்கினார். புயல், காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும்பருவ நிலை மாற்றங்கள் குறித்து அவ்வப்போது பதிவிட்டு வந்தார். இவரது தரவுகள் சரியாக இருக்கவே, தற்போது இவரை ஒரு லட்சம் பேருக்கும் மேல் பின் தொடர்கின்றனர். யூ டியூப் நிறுவனம் இவருக்கு விருது வழங்கியுள்ளது.

மாணவர் முத்துச்செல்வம் கூறியதாவது: எங்கள் பகுதி மானாவாரி விவசாய பகுதி. வானிலை குறித்து அறியாமல் பயிரிட்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எனது தாத்தா, தந்தை உள்ளிட்டோர் கவலைப்படுவர். அப்போது வானிலை குறித்து அறியும் எண்ணம் ஏற்பட்டது. கரோனாகாலத்தில் எனது செல்போனில் வானிலை குறித்த விஷயங்களை பார்த்துக்கொண்டிருந்தேன். இதில்,ஐரோப்பிய நாட்டின் செயற்கைக்கோள் (ECM) உலக முழுவதும் உள்ளவானிலையை ஆய்வு செய்து,தரவுகள் அளித்துக்கொண்டே இருந்தது. இதனைக் கொண்டு, விவசாயிகளுக்கு உதவும் வகையில் வானிலைஅறிக்கைகளை வெளியிட, ‘ முத்துச்செல்வம் வெதர்மேன்’ என்ற யூ டியூப் சேனலைத் தொடங்கினேன்.

இசிஎம்மில் இருந்து வரும் தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்து, தமிழகத்தில் எந்த இடத்தில் தாழ்வுநிலை உருவாகும் அல்லது புயல்உருவாகும் என்பதை 15 நாட்களுக்குமுன்னதாக தெரிவிக்கலாம். உதாரணமாக 2020-ம் ஆண்டு தென்மேற்குவங்கக் கடல்பகுதியில் ‘நிவர்’ புயல்உருவானது. இந்த புயல் புதுச்சேரியில் கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை மையம் அறிவித்தது. ஆனால்,நான் இந்த புயல் செங்கல்பட்டு மாவட்டம் தெற்கு பகுதியான மாமல்லபுரம் முதல் கல்பாக்கம் இடையே கரையைக் கடக்கும் எனக் கூறியிருந்தேன். அதுபோல்தான் கரையைக் கடந்தது. வானிலைகுறித்த அறிவிப்புகளை 15 நாட்களுக்கு முன்னதாக தெரிவிப்பதால் விவசாயிகள் பயனடைவார்கள்.

தற்போது விவசாயிகளுக்காக ஒரு செயலியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தமிழக அரசு என்னைப் போன்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினால் இதை விட சிறப்பான விஷயங்களைச் செய்யலாம். நான் பள்ளியில் படிக்கும் போது, வானிலை ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றிய ரமணனின் பேட்டியை அடிக்கடி தொலைக்காட்சியில் பார்ப்பேன். அதுபோல் நானும் வானிலை குறித்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT