தமிழகம்

நீலகிரி மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை முதல் முறை வாக்காளர்கள் தீர்மானிப்பார்களா?

ஆர்.டி.சிவசங்கர்

முதல் முறை வாக்காளர்களாக உள்ள 17,159 பேர், நீலகிரி மாவட்ட வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிப்பார்கள் என்பதால், வாக்குகளை கவர அரசியல் கட்சியினர் தீவிரமாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 170 ஆண், 2 லட்சத்து 92 ஆயிரத்து 484 பெண், 5 திருநங்கைகள் உள்ளனர். இதில், முதல் முறை வாக்காளர்கள் 17,159 பேர் உள்ளனர். 20 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் 53,925, 25 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 54,286 பேர் உள்ளனர். 30 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 864, 40 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்கள் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 919 பேர், 50 முதல் 59 வயதுக்கு உட்பட்டோர் 96 ஆயிரத்து 999 பேர், 60 முதல் 69 வயதுடையவர்கள் 56 ஆயிரத்து 939 பேர், 70 முதல் 79 வயதுடையவர்கள் 21 ஆயிரத்து 948 பேர், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5,620 பேர் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் உதகை தொகுதியில் - 5775, கூடலூரில் 6313, குன்னூரில் - 5071 பேர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த தேர்தலில் உதகை தொகுதியில் அதிமுக வேட்பாளர் புத்திசந்திரன் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.கணேஷை விட 7545 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். குன்னூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கா.ராமச்சந்திரன் 9292 வாக்குகள் வித்தியாசத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஏ.பெள்ளியை தோற்கடித்தார்.

கூடலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.திராவிடமணி அதிகபட்சமாக 27 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில், தேமுதிக வேட்பாளர் செல்வராஜை தோற்கடித்தார். போட்டி பலமாக இருக்கும்பட்சத்தில், வாக்குகள் வித்தியாசம் 5 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கும். தற்போது 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இவர்களின் வெற்றியை தீர்மானிப்பது, முதல் முறை வாக்காளர்களின் வாக்குகளாகவே இருக்கும். எந்தக் கட்சியையும் சாராதவர்கள் என்பதால், இவர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இதனால், அரசியல் கட்சியினர் இளம் வாக்காளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க இறுதிக் கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT