மிடாஸ் நிறுவனத்தையும், கொடநாடு எஸ்டேட்டையும், சிறுதாவூர் பங்களாக்களையும், மற்றும் கணக்கிலடங்காத சொத்துக்களையும், பணப் பரிமாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் நிர்வகிப்போர் எல்லாம் யார்? இவ்வளவு அழுக்குகளையும் குவித்து வைத்திருக்கும் பின்னணியில், குடும்ப அரசியல் பற்றி ஜெயலலிதா பேசலாமா? என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: "15வது சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 24 மணி நேரமே உள்ளது! ஆடம்பரம், ஆணவம், அகம்பாவம் ஆகியவற்றின் உச்சியிலே அமர்ந்துள்ள ஜெயலலிதா, கடந்த ஐந்தாண்டு காலத்தில் யாரையும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை; “எனது அரசு” - “நான் அறிவிக்கிறேன்” என்று அவர் விடுத்த ஒவ்வொரு அரசு அறிக்கையிலும் தொக்கி நிற்கும் தன் முனைப்புத் தொனியை யாரும் மறக்கவில்லை.
எந்த எதிர்க் கட்சியினரையும் பேரவையில் ஜனநாயக ரீதியாக எதிர்க் கருத்துகளைப் பேசவோ, ஆக்க பூர்வமாக விமர்சிக்கவோ, குரல் எழுப்பவோ அனுமதிக்கவில்லை என்பதை நாடே கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
2011ஆம் ஆண்டு தேர்தல் முடிந்து பதவிக்கு வந்தவுடன், வாரந்தோறும் செய்தியாளர்களைச் சந்திப்பேன் என்று ஜெயலலிதா தான் கூறினார். ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவும் இல்லை. முதலமைச்சர் செய்தியாளர்களைச் சந்திக்கவும் இல்லை. அதுபோலவே அரசு அலுவலர் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளையோ, தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளையோ இந்த ஐந்தாண்டு கால வரலாற்றில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது.
தற்போது தேர்தல் என்றதும், "மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்" எனக் கூறுகிறாரே, அந்த மக்களை எங்கேயாவது, எந்த மாவட்டத்திற்காவது சென்று கடந்த ஐந்தாண்டுகளில் சந்தித்தது உண்டா என்றால் அதுவும் கிடையாது தான்.
குறிப்பாக விளக்க வேண்டுமானால், "மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்" என்பதற்கு மாறாக "எனக்காக நான், எனக்காகவே நான்; சசிகலா மற்றும் பரிவாரங்களுக்காக மட்டுமே நான்” என்று சொல்லிக் கொள்ளலாம்.
தப்பித் தவறி இந்தத் தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று விட்டால், இதைத் தான் மறுபடியும் அவரே சொல்லிக் கொள்வார். "தமிழ்நாடு" என்ற பெயரை மாற்றி "அம்மா நாடு" என்று 110வது விதியின் கீழ் அறிவித்து விடுவார்.
2011-ல் ஆட்சியை ஆரம்பித்த போது கழக ஆட்சியில் அரசுக்காக வாங்கப்பட்ட கடனையெடுத்துக் காட்டி, அந்தக் கடனின் அளவைக் குறைப்பேன் என்றெல்லாம் அறிவித்தார்.
"தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும் வழிவகை செய்யப்படும்" என்றெல்லாம் தேர்தல் அறிக்கையிலேயே ஜெயலலிதா சொன்னார். ஆனால் தற்போது என்ன நிலைமை? மின்வாரியக் கடன்களைச் சேர்க்காமல், தமிழக அரசுக்கு உள்ள மொத்தக் கடன் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி ரூபாய்.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வருடைய தலையிலும் 28 ஆயிரத்து 778 ரூபாய் கடன் சுமை ஏறி இருக்கிறது. 2011ஆம் ஆண்டு, தி.மு. கழக ஆட்சி முடிவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு, 9-4-2011 அன்று மத்திய நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி "இந்தியாவில் நிதி ஒழுங்கையும், நிலைத்தன்மையையும் திருப்திகரமாகக் கடைப்பிடித்து வரும் ஒரு சில மாநிலங்களுள் தமிழகமும் ஒன்றாகும். தமிழக அரசின் கடன் அளவு, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ஒரு நாள் கூட தன் கணக்கில் பணம் இல்லாமல், கூடுதல் வரைவுத் தொகையை "ஓவர்-டிராப்ட்"டை தமிழக அரசு பெற்றதில்லை" என்று தி.மு. கழக அரசின் சிறப்பான நிதி மேலாண்மை குறித்துப் பாராட்டிச் சொல்லியிருந்தார். ஆனால் இன்றைய அ.தி.மு.க. ஆட்சியின் நிலை குறித்து ஆங்கில நாளேடுகள் எல்லாம் சொல்வது என்ன?
2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பத்து மாத காலத்தில் பால் விலை உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு, ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை ஒரேயடியாக 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்தார்கள்.
2001ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் அமைச்சராக வந்த போதும், 1-12-2001 முதல் மின் கட்டணங்களை உயர்த்தினார். மீண்டும் 15-3-2003 அன்றும் 1398 கோடி ரூபாய்க்கு மின் கட்டண உயர்வுகளைச் செய்தார்.
அன்றையதினம் தான் தி.மு. கழக ஆட்சியில் வழங்கப்பட்ட விவசாயம் மற்றும் குடிசைகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து அறிவித்தார். வீடுகளுக்கான மின் கட்டணத்தை 22.13 சதவிகிதமும், கல்வி நிலையங்களுக்கு 16.61 சதவிகிதமும் உயர்த்தினார். அப்படியும் தமிழ்நாட்டில் நிதி நிலைமை என்ன ஆயிற்று?
“இந்து” வெளியிட்டுள்ள செய்தியிலேயே “The State Government’s financial health is quite bad” என்று எழுதப் பட்டிருந்தது.
டாஸ்மாக் வருவாயை உயர்த்துவதில் தான் அரசு அதிக அக்கறை எடுத்துக் கொண்டது. அந்த அளவுக்கு நிர்வாகத் திறமையை மற்ற துறைகளிலும் காட்டியிருந்தால், மொத்த வருவாய் அதிகரித்திருக்கும்.
அரசின் மெத்தனம் தான் இதற்குக் காரணம். இதைச் சமாளிக்க கடன் வாங்குவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. ஏற்கனவே ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் தமிழக அரசு தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
இதனால் மாநிலத்தின் மொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும். பழைய வரி பாக்கிகளை வசூலிக்கவும், வரி ஏய்ப்பைத் தடுக்கவும் அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. தமிழக அரசின் கடன் தவிர மின்வாரியத்தின் கடன் ஒன்றரை இலட்சம் கோடி ரூபாய் இருக்கிறது. பொதுத் துறை நிறுவனங்களின் கடனையும் சேர்த்தால் தமிழகத்தின் மொத்தக் கடன் சுமை நான்கு இலட்சம் கோடி ரூபாயைத் தாண்டும்.
தஞ்சை தேர்தல் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா "ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு முன்பு ஆயிரம் முறை யோசிப்பேன், கடந்த சட்ட மன்றத் தேர்தலின் போது நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி யிருக்கிறேன்" என்றெல்லாம் தனக்குத் தானே பாராட்டிக் கொண்டார்.
2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடி தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்றும்; அதன் மூலம் 56 இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும் என்றும், மின்சாரத் திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சாரப் பாதுகாப்புப் படை அமைக்கப் படும் என்றும்; 2012ஆம் ஆண்டுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப் படும் என்றும், 2013ஆம் ஆண்டுக்குள் 300 மெகாவாட் சோலார் எனர்ஜி பார்க்ஸ் பத்து உருவாக்கப்பட்டு, 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்றும், சென்னை, மதுரை, திருச்சி, கோவைக்கு சிங்கப்பூரில் உள்ளபடி "மோனோ ரெயில் திட்டம்" செயல்படுத்தப்படும் என்றும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு திட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்றும், தென் தமிழகத்தில் "ஏரோ பார்க்" ஏற்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் எல்லாம் ஆயிரம் முறை ஜெயலலிதா யோசித்து வெளியிட்டவை தானே? அவைகள் ஏன் நிறைவேற்றப்படவில்லை?
இவை மாத்திரமல்ல; கடந்த ஆண்டுகளில் நிதி நிலை அறிக்கைகளில், கூவம் நதியைச் சீரமைக்க ரூ. 3,833.62 கோடியில் பெரும் திட்டம், ஆறுகள் இணைப்பு வெள்ளத் தடுப்புப் பணிக்கு ரூ. 5,166 கோடி, 3 வழித் தடங்களில் ரூ. 8,350 கோடியில் மோனோ ரெயில் திட்டம், ரூ.1,075 கோடியில் நெமிலிச்சேரியையும் மீஞ்சூரையும் இணைக்கும் இரண்டாம் கட்ட வெளிவட்டச் சாலை, சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஒருங்கிணைந்த அறிவுசார் பூங்கா, தேர்வாய்க் கண்டிகை, திருக்கண்டலம், ராமஞ்சேரி ஆகிய இடங்களில் தலா ஒரு டி.எம்.சி. கொள்ளளவு கொண்ட புதிய ஏரிகள் என அறிவிக்கப்பட்ட பல அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயின? விளம்பரக் காற்றில் பறந்து போய் விட்டனவோ!
2012ஆம் ஆண்டிலேயே ஒரே நாளில் 12 கம்பெனிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதாகவும், அதன் மூலம் 36,855 பேருக்கு வேலை கிடைக்குமென்றும், 20 ஆயிரத்து 925 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலைகள் தொடங்குமென்றும் பூதாகாரமாக அறிவிப்பெல்லாம் செய்து, ஏடுகளில் எல்லாம் பெரிதாகச் செய்தி வெளியிட்டார்கள். அந்த 12 கம்பெனிகளின் முதலீடும் தமிழகத்திற்கு வந்து அவர்கள் எல்லாம் தொழில்களைத் தொடங்கி விட்டார்களா, அந்தக் கம்பெனிகளில் 36 ஆயிரத்து 855 பேர் வேலை வாய்ப்புப் பெற்றிருக்கிறார்களா என்ற விவரங்களை யெல்லாம் அரசின் சார்பில் மக்களுக்கு தெரிவித்தால் நல்லது என்று கேட்டிருந்தேன்.ஆனால் ஆட்சியினர் இதுவரை வாயே திறக்கவில்லை. நடந்திருந்தால் அல்லவா நாவசைக்க முடியும்!
முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி 13-2-2015 அன்று சென்னையில் நடைபெற்ற முன்னோட்ட மாநாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏழு நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று மிகப் பெரிய விளம்பரம் செய்தார்களே தவிர அங்கே அந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் நிகழ்ச்சி நடைபெற்றதா என்றால் கிடையாது.
பிறகு 100 கோடி ரூபாய் அரசுப் பணத்தைச் செலவழித்து நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தவாறு இரண்டு இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் வந்தனவா? இல்லை என்பது தான் வேதனையான பதில்!
ஜெயலலிதா இன்று விடுத்துள்ள அறிக்கையில் இலங்கைத் தமிழர்கள் பற்றியும், அதிலே தி.மு. கழகத்தின் மீது குறை கூறியும் தெரிவித்திருக்கிறார். இலங்கைத் தமிழர்கள் நலன் பற்றிப் பேசுவதற்கு ஜெயலலிதாவுக்கு ஏதாவது தகுதி உண்டா? ஜெயலலிதா 16-4-2002 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றிய தீர்மானம் மறந்து விட்டதா? "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து, இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது. மேலும், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்றும் மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது" என்று தமிழகச் சட்டப் பேரவையில் 16-4-2002 அன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியவர் ஜெயலலிதா என்பதை தமிழ்நாட்டு வாக்காளர்கள் மறந்து விட்டார்களா என்ன? ஜெயலலிதா மறந்து விட்டாலும், உலகத் தமிழர்கள் மறக்கவில்லை. இன்று இலங்கைத் தமிழர்களுக்காக ஜெயலலிதா வடிக்கும் நீலிக் கண்ணீரைக் கண்டு யாரும் ஏமாறப் போவதில்லை.
17-1-2009 அன்று ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், "இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ண வில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதிவிலக்கல்ல. எங்கே யுத்தம் - போர் நடந்தாலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இன்று இலங்கையில் என்ன நடக்கிறதென்றால், இலங்கைத் தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்குச் செல்லவிடாமல் விடுதலைப் புலிகள் அவர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு வலுக்கட்டாயமாக ராணுவத்தின் முன்னால் அவர்களை ஒரு கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியதை ஜெயலலிதாவே மறந்து விட்டாரா?
அடுத்து, ஜெயலலிதா தனது அறிக்கையில் குடும்ப அரசியல் என்றெல்லாம் கூறியிருக்கிறார். ஆனால் அவருடன் நிழலாகத் தொடர்ந்து வரும் சசிகலா யார்? இளவரசி யார்? சுதாகரன் யார்? தினகரன் யார்? திவாகரன் யார்? ராவணன் யார்? அந்தக் குடும்பங்களெல்லாம் ஜெயலலிதாவோடு இரண்டறக் கலந்தவை தானே? "ஜாஸ் சினிமாஸ்" திரை அரங்குகளையும், டாஸ்மாக்குக்காக மதுவகைகளைத் தயாரிக்கும் மிடாஸ் நிறுவனத்தையும், கொடநாடு எஸ்டேட்டையும், சிறுதாவூர் பங்களாக்களையும், மற்றும் கணக்கிலடங்காத சொத்துக்களையும், பணப் பரிமாற்றத்திற்காகவே உருவாக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் நிர்வகிப்போர் எல்லாம் யார்? இவ்வளவு அழுக்குகளையும் குவித்து வைத்திருக்கும் பின்னணியில், குடும்ப அரசியல் பற்றி ஜெயலலிதா பேசலாமா?
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்திலே எந்தத் தரப்பினராவது திருப்தியாக இருந்தது உண்டா? கழக ஆட்சியில் நியமனம் பெற்ற காரணத்திற்காக மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரம் பேர் வேலை நீக்கம் செய்யப் பெற்று, அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று அவர்களுக்குச் சார்பாக தீர்ப்பு பெற்ற பிறகும் மீண்டும் அவர்களைப் பணியிலே நியமிக்க மனம் வரவில்லை என்றால் அது கல் நெஞ்சத்தின் அடையாளம் தானே? பிறகு தன்னைத் "தாய்" என்று அழைத்துக் கொள்வதற்கு என்ன தகுதி?
கழக ஆட்சியில் ஒரு சில அதிகாரிகள் அரசுப் பணியில் திறமையாகப் பணியாற்றினார்கள் என்பதற்காக கடந்த ஐந்தாண்டு காலமாக அவர்கள் எல்லாம் எந்த அளவுக்குத் துரத்தியடிக்கப்பட்டுப் பழிவாங்கப்பட்டார்கள்? ஏன், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர், எப்படியெல்லாம் பழி வாங்கப்பட்டார்கள்? திரைப்படங்களுக்கு தமிழிலே பெயர் வைத்துத் தயாரித்தால் அரசின் சார்பில் வரிவிலக்கு அளிக்கப்பட்டு வந்தது. அதைக்கூட தங்களுக்குப் பிடிக்காதவர்கள் தமிழில் பெயர் வைத்துத் தயாரித்தால் கூட, அதற்கு வரி விலக்கு மறுத்த ஆட்சி தானே ஜெயலலிதாவின் ஆட்சி!
இன்னும் எத்தனையோ அட்டூழியங்கள், அராஜகங்கள், அதிகார அத்துமீறல்கள், அநியாயங்கள்! இந்தக் கொடுமைகளுக்கெல்லாம் காரணமான அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் தொடரலாமா? ஏற்கனவே இந்த ஐந்தாண்டுகளில் காடாகி விட்ட நாடு, பாலைவனமாகிப் பாழாகிப் போய் விடாதா? தமிழ்நாட்டு மக்கள் இனியும் அதை அனுமதிக்கலாமா? 234 தொகுதிகளிலும் நானே போட்டியிடுவதாக எண்ணிக் கொள்ளுங்கள் என்று நான் எழுதியவுடன், எல்லாவற்றிலும் "காப்பி" அடிக்கும் ஜெயலலிதாவும் என்னைப் பின்பற்றி, 234 தொகுதிகளிலும் அவரே வேட்பாளராக நிற்பதாக இன்றைய அறிக்கையிலே குறிப்பிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும், நான் அல்ல, பேரறிஞர் அண்ணாவே போட்டியிடுகிறார்; தந்தை பெரியாரே போட்டியிடுகிறார்; திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடுகிறது; உண்மையான திராவிட இயக்கம் போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் கழகக் கூட்டணியின் சார்பில் திராவிட முன்னேற்றக் கழகம் 174 இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் கை சின்னத்திலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 5 இடங்களில் ஏணி சின்னத்திலும், மனித நேய மக்கள் கட்சி 4 இடங்களில் கப் அண்ட் சாசர் சின்னத்திலும், புதிய தமிழகம் கட்சி 4 இடங்களில் டி.வி. சின்னத்திலும், மக்கள் தே.மு.தி.க. 3 இடங்களில் உதய சூரியன் சின்னத்திலும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் கட்சி, சமூக, சமத்துவப் படை கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் தலா ஒவ்வொரு இடத்தில் உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடு கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பெருவாரியாக உங்களுடைய வாக்குகளை வழங்கி வெற்றி பெறச் செய்யுங்கள்.
தமிழகத்திலே நடைபெறுகின்ற அராஜக, கொடுங்கோன்மை ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் ஆழக் குழி தோண்டிப் புதைத்திட உறுதி மேற்கொள்ள வேண்டிய நேரம் இது!
உண்மையானதொரு ஜனநாயக ஆட்சி உதயமாக உங்கள் அனைவருடைய நல்லாதரவையும் வேண்டி எனது அன்பான கோரிக்கையினை உங்கள் முன் வைக்கின்றேன்.
உங்களுக்காக உழைத்திட உத்திரவிடுங்கள்! சொன்னதைச் செய்வோம்; செய்வதைத் தான் சொல்வோம்!"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.