பட்டுக்கோட்டை அருகே அதிமுக நிர்வாகியின் வீட்டிலிருந்து தேர்தல் பறக்கும் படையினர் ரூ.49.70 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் திட்டக்குடி ஊராட்சியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மா.கோவிந்தராஜ். அதிமுக கிளைச் செயலாளரான இவரது வீட்டில், வாக்காளர்களுக்கு தருவதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு ஆன்-லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுபடி, பட்டுக் கோட்டை சிறப்பு வட்டாட்சியர் ரமேஷ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர், நேற்று பிற்பகல் கோவிந்தராஜ் வீட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டிலிருந்து கணக்கில் வராத ரூ.49.70 லட்சம் பணத்தை கைப்பற்றினர். கைப்பற் றப்பட்ட பணத்துக்கு கோவிந்தராஜ் உரிய ஆவணங்களை அளிக்காத தால், அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்து, கீழே விழுந்த கோவிந்தராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திட்டக்குடி ஊராட்சிக்கு அருகில் உள்ள ஆலத்தூர் ஊராட்சித் தலைவரான சி.வி. சேகர், பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.