கோவை: கேரளாவின் சில பகுதிகளில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலி யாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு நிற திட்டுகளை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், தமிழக - கேரள எல்லைப்பகுதியான வாளையாறு சோதனைச் சாவடியில் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரேனும் வருகின்றனரா என கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, சுகாதாரத் துறையினர் கூறும்போது, “கேரளாவில் இருந்து தமிழக எல்லைக்குள் வருபவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. தோலில் ஏதேனும் திட்டுகள் உள்ளனவா என்பது குறித்தும் கேட்கப்படுகிறது. மேலும், அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கு இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதும் உள்ளதா என்று கண்டறிந்து தெரிவிக்க 24 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையில் இதுவரை இந்த காய்ச்சலின் பாதிப்பு கண்டறியப்படவில்லை. அறிகுறிகள் இருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும்.உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு இந்த காய்ச்சல் அபாயகரமானது அல்ல.தானே சரியாகிக் கொள்ளும் தன்மை கொண்டது. ஆனால், இது வேகமாக பரவக் கூடியது. இவ்வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் தக்காளி நிறத்தில் திட்டுகள் ஏற்படுவதால் இதை தக்காளி காய்ச்சல் என கூறுகின்றனர்” என்றனர்.