காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் சுனில் பாலிவால் மற்றும் அதிகாரிகள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணி 18 மாதங்களில் முடிவடையும்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை ராஜாஜி சாலையில் உள்ள துறைமுக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம், மத்திய அரசின் ரூ.98 கோடி நிதியில் சர்வதேச தரத்துக்கு நவீனப்படுத்தப்பட உள்ளது. இப்பணிகளுக்கு 2 மாதங்களில் டெண்டர் கோரப்படும். 18 மாதங்களில் அனைத்துப் பணிகளும் நிறைவடையும்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குளிர்சாதனக் கிடங்குகள், தரம் பிரிப்பது, மீன்களைப் பதப்படுத்துவதற்கான ஐஸ் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கான வசதிகள் என பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், 2 ஆயிரம் படகுகள் நிறுத்தும் வசதிகளும் ஏற்படுத்தப்படும். இதுமட்டுமின்றி, இந்தியாவில் முதன்முறையாக தமிழகத்துக்கு மட்டும்தான் கடல்பாசி பூங்கா திட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கடல்பாசி பூங்காவுக்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசு அளித்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்பாசி பூங்கா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இலங்கையில் உள்ள படகுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பேச்சுவார்த்தை மூலமாகத்தான் இதற்குதீர்வு காண முடியும். இந்து மக்களின் ஒற்றுமையின் காரணமாக தருமபுர ஆதீன பட்டினப் பிரவேசத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

SCROLL FOR NEXT