சென்னை: அசானி புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவிலும், நேற்று காலையிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கத்தரி வெயில் காலத்தில், குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
வங்கக் கடலில் நிலவும் அசானி புயல் காரணமாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த காற்றுடன்கூடிய கனமழை பெய்தது. இதையடுத்து பல இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால், தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
மடிப்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.சில பகுதிகளில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன.இதேபோல, வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், திருவல்லிக்கேணி, விருகம்பாக்கம், எழும்பூர், பெரம்பூர், வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், பட்டாபிராம், வில்லிவாக்கம், கோயம்பேடு, தண்டையார்பேட்டை, கொரட்டூர், ராயபுரம் பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. சில இடங்களில் மின்சாரம் தடைபட்டது.
நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. கடந்த சில நாட்களாக கத்தரி வெயில் வாட்டிய நிலையில், நேற்று குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.