தாம்பரம்: தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் உள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் தாம்பரம் மாநகராட்சி மற்றும் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்துக்காக புதிய அலுவலகக் கட்டிடங்களைக் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை பல்துறை அதிகாரிகள் நேற்று கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
தாம்பரம் சானடோரியம் நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில் தாம்பரம் மாநகராட்சி புதிய அலுவலகம் கட்ட 4.3 ஏக்கர், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் கட்ட 5 ஏக்கர், தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு 5 ஏக்கர் நிலம் தேவை என அரசிடம் கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருத்துவத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை, மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் ரவி, மருத்துவத் துறை இயக்குநர் நாராயண பாபு, தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், மேயர் க.வசந்தகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை கண்காணிப்பாளர் தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளுக்கு ஏற்ற அமைதியான சூழ்நிலை நிலவுவதால் மருத்துவமனை தவிர பிற அலுவலகங்களுக்கு இங்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர்.