ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக எல்லையில் பேருந்துகளில் பயணித்துக்கொண்டிருந்த தமிழர்களை, கடந்த ஆண்டு ஏப்ரல் 7-ம் தேதி, ஆந்திர மாநில செம்மரக் கடத்தல் தடுப்பு போலீஸார், வலுக்கட்டாயமாக கைது செய்து, 20 பேரை கொடூரமாக சுட்டுக்கொன்றனர்.
மக்கள் கண்காணிப்பகத்தின் வழக்கறிஞர் ஹென்றி திபேன் குழுவினர், நேரில் ஆய்வு செய்து, இந்த உண்மையை அம்பலப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆந்திர மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்தது. கொலை செய்யப்பட்ட சசிகுமாரின் மனைவி முனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சந்திரகிரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்திலும் வழங்கு தொடரப்பட்டது.
இதில், முனியம்மாள் கொடுத்த புகாரை விசாரித்ததில், 20 தமிழர்கள் கொலை செய்யப்பட்டதற்கு போதிய சாட்சியங்களோ, ஆதாரங்களோ இல்லை என்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இயலாது என்று சிறப்பு புலனாய்வுக் குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திய பின், வெளியிட்ட அறிக்கையில், கொலை குறித்து உண்மைகள் வெளிவர வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதை செயல்படுத்த ஆந்திர மாநில உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. அதை நீக்க மனித உரிமை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும்.
இந்த விவகாரத்தில் கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வைகோ கூறியுள்ளார்.