மதுரை: செக்கானூரணி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் திடீரென்று முன்னறிவிப்பின்றி நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் குவித்து வைத்த நெல்கள் முளைக்க ஆரம்பித்துள்ளன. இதனால் விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கிய கடனையும், அதற்கான வட்டியையும் செலுத்த முடியாமல் கவலையடைந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே ஆ.கொக்குளம், கிண்ணிமங்கலம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன. இந்தப் பகுதியில் விளைவிக்கப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் அனுப்பி வந்தனர். ஆனால், எந்த ஒரு முன்னறிவிப்பினறி திடீரென இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்டது.
இது குறித்து கொக்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "கடன் வாங்கிதான் நெல் விவசாயம் செய்தோம். சரியான தண்ணீர், கோடை வெயில் உச்சத்திற்கு மத்தியில் விளைவித்த நெல்களை அறுவடை செய்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைத்துள்ளோம். வயல் வெளிகளில் நெல் சாகுபடி செய்வதற்கு பாடுபட்டோம். தற்போது அறுவடை செய்து நெல்களை கொள்முதல் நிலையங்களில் வைப்பதற்கு காத்திருக்கிறோம். அதிகாரிகள் நெல்களை கொள்முதல் செய்யாததால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட நெல் குவியல்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டன. தற்போது பெய்து வரும் கோடை மழையால் நெல் அழுகிப் போகும் அபாயம் உள்ளது.
அதிகாரிகள் கேட்ட பட்டா. சிட்டா கொடுத்துள்ளோம். ஆனால், நெல் குவியல்களை எடுக்க அரசு மறுத்து வருகிறது. அதனால், விவசாயம் செய்வதற்கு வாங்கிய கடனையும், அதற்கான வட்டியை செலுத்த முடியாமல் கஷ்டப்படுகிறோம். மாவட்ட ஆட்சியர் நேரடியாக தலையிட்டு நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து அறுவடை செய்த எங்களின் நெல் குவியல்களை கொள்முதல் செய்து உடனடியாக பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.