தமிழகம்

தமிழ்ப்பற்றில் எந்த வகையிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல: ஆளுநர் தமிழிசை

செய்திப்பிரிவு

புதுச்சேரி: "மற்றவர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட எங்களுடைய பற்று எந்த வகையிலும் குறைந்தது கிடையாது. தமிழ்ப்பற்றில் எந்த வகையிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல. ஜிப்மர் முன்பு போராட்டம் நடத்துவது தவறு" என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டங்களை ஒட்டி சரக்கு மற்றும் சேவை வரி மற்றும் மத்திய கலால் வரி ஆணைய (Gst & Central Excise) அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்குகொண்ட மிதிவண்டி பேரணியை துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று கடற்கரை சாலையில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். ஜிஎஸ்டி ஆணையர் பத்மஸ்ரீ, இணை ஆணையர் சதீஷ் குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறுகையில், "ஜிப்மர் மருத்துவமனையில் இந்தி திணிப்பு நடைபெறவில்லை. பொதுமக்களுக்குத் தரப்படும் அத்தனை அறிக்கைகளும் தகவல்களும் தமிழில்தான் இருக்கின்றன. தமிழ் முதலிலும், ஆங்கிலம், இந்தி என்ற முறையில் இருக்கிறது. ஆனால், மறுபடியும் மறுபடியும் பல்வேறு இயக்கங்கள் போராட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறான அணுகுமுறை.

மருத்துவமனைக்கு பல இடங்களிலிருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து 60-70 சதவீதம் மக்கள் வருகிறார்கள். ஜிப்மர் அவசர சேவை பெறக்கூடிய ஒரு மருத்துவமனை. அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவது பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும். எந்த வகையிலும் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டை அரசு சொன்ன பிறகும் இந்தி மொழி அறிந்தவர்களுக்காக மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு சுற்றறிக்கையை வைத்துக்கொண்டு இந்தி திணிக்கப்படுகிறது என்ற ஒரு செய்தி பரப்பப்படுகிறது.

மற்றவர்களுக்கு இருக்கும் தமிழ்ப்பற்றை விட எங்களுடைய பற்று எந்த வகையிலும் குறைந்தது கிடையாது. நான் தமிழில்தான் பதவி ஏற்றேன். புதுச்சேரி சரித்திரத்தில் முதல் முறையாக ஆளுநர் உரை தமிழில் வாசிக்கப்பட்டது. தமிழ்ப்பற்றில் எந்த வகையிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல.

மருத்துவமனைக்கு முன்பாக போராட்டம் நடத்துபவர்கள் அங்கிருக்கும் நோயாளிகளுக்கு எதிராக நோயாளிகளின் நலனுக்கு எதிராக நடந்து கொள்பவர்கள். மருத்துவமனையில் கலவரம் செய்யக்கூடாது. ஜிப்மர் மருத்துவமனை முன்பு போராட்டம் நடத்துவது தவறு என்பதை அழுத்தமாக இங்கே பதிவு செய்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT