கோவை: பத்து ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் திமுக என்ற கட்சி இருக்காது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
இதுதொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கட்டாய இந்தி திணிப்பை பாஜக அனுமதிக்காது. அதுதான் எங்கள் நிலைப்பாடு. இதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. 10 ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இதுதான் எங்கள் கருத்து. இது என் கருத்து அல்ல. கட்சியின் கருத்து.
ஒரு குடும்பம் கட்சியை நடத்த வேண்டும் என்று நினைக்கிறது. அந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் அந்த கட்சி இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். வேறு யாருமே வளரக்கூடாது என்று நினைக்கின்றனர். இதையே காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பு நினைத்தனர். இப்போது காங்கிரஸ் எந்தநிலையில் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். திமுகவுக்கும், காங்கிரஸுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
10 ஆண்டுகள் கழித்து தமிழக அரசியலில் திமுக என்ற கட்சி இருக்கிறதா என்று பாருங்கள். பொதுமக்கள் அனைவரும் எல்ஐசி பங்குகளை விலைக்கு வாங்கலாம். இதை எப்படி தனியார்மயம் என்று சொல்ல முடியும்? எல்ஐசியை தனியாருக்கு விற்கவில்லை. இன்னமும் அது அரசு நிறுவனம்தான். 51 சதவீதத்துக்கும் மேல் அரசின் பங்கு உள்ளது. இதில் என்ன தவறு உள்ளது? பங்குகள் சீன நாட்டினருக்கோ, அமெரிக்க நாட்டினருக்கோ, ஜப்பான் நாட்டினருக்கோ செல்லவில்லை. தமிழக முதல்வர் முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்று ரூ.6,000 கோடி முதலீடு பெற்று வந்தார். அதில் ரூ.4 ஆயிரம் கோடி தனியார் நிறுவன மால் ஆகும். அடுத்து லண்டனுக்கு செல்ல உள்ளார்.
மின்வெட்டு வந்தால் மத்திய அரசு மீது குறைகூறுகின்றனர். ஆனால், 3 மின் உற்பத்தி மையங்கள் இங்கு செயல்படாமல் உள்ளன. மின்வெட்டு பற்றி பேசும் என்மீது வேண்டுமானால் வழக்கு போடட்டும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு உதவி செய்யும் முயற்சிக்கு தமிழக பாஜக உதவி செய்யும். நாங்களும் உறுதியாக இருக்கின்றோம். இதில் அரசியல் செய்ய நான் விரும்பவில்லை. நாங்களும் உதவி செய்ய முன் வந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.