சென்னை: வடபழனி உள்ளிட்ட 16 பணிமனை பேருந்து நிலையங்களை நவீனப்படுத்த சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, விருகம்பாக்கம் உறுப்பினர் பிரபாகர்ராஜா, வடபழனி மற்றும் கே.கே.நகர் பேருந்து நிலைய பணிமனையை நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ``வடபழனி உள்ளிட்ட 16 பணிமனை பேருந்து நிலையங்களை நவீனப்படுத்த தமிழ்நாடு உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியுதவியில், தமிழ்நாடு உட்கட்டமைப்பு நிதி மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழுவுடன் விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அறிக்கை கிடைத்ததும் முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தப்படும் போது வணிக வளாகங்களும் அமைக்கப்படும். கே.கே.நகர் பணிமனை பொறுத்தவரை, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அந்த இடத்தில் நில அளவியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நவீனப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு குறித்த இடைக்கால அறிக்கை கடந்தாண்டு அக்டோபரம் மாதம் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நவீனப்படுத்தப்படும்” என்றார்.