தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா சார்பில் திருப்பூர் வடக்கு தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ரவி (எ) சுப்பிரமணியன், தெற்கு தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.தங்கவேல் ஆகியோரை ஆதரித்து, திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
ஊழலுக்கு எடுத்துக்காட்டான மாநிலமாக தமிழகம் உள்ளதற்கு, திமுக, அதிமுக தான் காரணம். பல ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த (செய்யும்) இவ்விரு கட்சிகளிடம் எளிமை, நேர்மை, வெளிப்படை, தூய்மை இல்லை.
மதுவை ஒழிக்க நல்லவர், நாணயமானவர்களால் மட்டுமே முடியும். எங்களுக்கு மடியில் கனமில்லை; ஆகவே, வழியிலும் பயமில்லை. திமுக, அதிமுகவால் மதுவுக்கு மூடுவிழா நடத்த முடியாது.
கடந்த வாரம் தேமுதிக அலுவலகம் தாக்கப்பட்டது, திருவாரூரில் வைகோ பிரச்சாரத்தின்போது சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இது, திமுகவின் வேலை என வைகோ குறிப்பிட்டுள்ளார். திமுக, அதிமுகவுக்கான தேர்தல் ஜூரத்தை இது காட்டுகிறது.
எங்களிடம் பணம், ஆள், அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், மக்கள் பலம் இருக்கிறது. இவ்விரு கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊழலில் இருந்து தமிழகத்தை ஆண்டவனாலும் காக்க முடியாது.
தற்போது மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் நம்பிக்கையோடு, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகாவை ஆதரிக்க இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.