சென்னை: பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இருவர் திமுகவுடன் தொடர்பில் உள்ளனர் என்றும் கட்சித் தலைமை அனுமதியளித்தால் இருவரையும் தூக்கிவிடுவோம் என்றும் திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். நேற்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையை நேரில் சந்தித்த சூர்யா சிவா பாஜகவில் இணைந்தார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டு வரும் கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக எம்.பி. செந்தில்குமார் ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். அது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், ''திமுகவில் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதைக் கொண்டாடும் தமிழக பாஜகவினரே உங்களுக்கு ஒரு தகவல். உங்கள் கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளானர். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.