தமிழகம்

தமிழர்கள் தடம்பதித்த 4 மாநிலங்களில் அகழாய்வு: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழர்கள் தடம்பதித்த 4 மாநிலங்களில் அகழாய்வு நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொல்லியல் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அப்போது பேசிய முதல்வர், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மயிலாடும்பாறை என்ற இடத்தில் ஈமச்சின்னங்கள் மற்றும் வாழ்விடப் பகுதியில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. பாறை ஓவியங்கள், புதிய கற்காலக் கருவிகள் என அரியவகை தொல்லியல் அடையாளங்களைக் கொண்ட மயிலாடும்பாறையின் வாழ்விடப் பகுதியில் 104 செ.மீ. மற்றும் 130 செ.மீ. ஆழத்தில் சேகரிக்கப்பட்ட இரண்டு கரிம மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ப்ளோரிடா மாநிலத்தின் பீட்டா பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்தப் பகுப்பாய்வின் காலக் கணக்கீடு முடிவுகள் தற்போது பெறப்பட்டுள்ளன. அவற்றின் சராசரி மைய அளவீட்டுக் காலம் முறையே கி.மு. 1615 மற்றும் கி.மு. 2172 என்று காலக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்னரே நிலவி வந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மனித இனம் இரும்பின் பயனை உணரத் தொடங்கிய பின்புதான், அடர்ந்த வனங்களை அழித்து வேளாண்மை செய்திடும் போக்கு உருவாகியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் வேளாண்மைச் சமூகம் தொடங்கிய காலம் குறித்தான கேள்விகளுக்கு ஒரு தெளிவான விடை இன்று கிடைத்திருக்கிறது.அதேபோன்று, கருப்பு - சிவப்பு பானை வகைகள் 4200 ஆண்டுகளுக்கு முன்னரே அதுவும் புதிய கற்காலத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் அறியமுடிகிறது.

தமிழ்நாடு தொல்லியல் துறையின் முயற்சிகள் இத்தோடு நின்றுவிடப் போவதில்லை. தொடர்ந்து தமிழர்கள் தடம்பதித்த இந்தியாவின் பிறபகுதிகளிலும், கடல் கடந்து வெற்றி கொண்ட நாடுகளிலும் அகழாய்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, கேரளாவின் பட்டணம், கர்நாடக மாநிலத்திலுள்ள தலைக்காடு, ஆந்திர மாநிலத்தின் வேங்கி, ஒடிசாவிலுள்ள பாலூர் பகுதிகளில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்ற செய்தியை இந்த அவைக்கு மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோன்று, சங்ககாலத் துறைமுகமான கொற்கையில் ஆழ்கடலாய்வின் முதற்கட்டமாக முன்கள ஆய்வு இந்த மாதம் தொடங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும், சிந்துவெளி நாகரிக முத்திரை எழுத்துகளுக்குமான உறவை ஒப்பீடு செய்து, ஆய்வு செய்திடும் திட்டத்தை தமிழ்நாடு தொல்லியல் துறை இந்தாண்டு முதல் மேற்கொள்ளும் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசினார்.

SCROLL FOR NEXT