நாமக்கல்: சின்ன வெங்காயத்திற்கு உரிய விலை கிடைக்கும் வரை பாதுகாப்பாக வைக்க சேமிப்புக் கிடங்குகள் அமைத்து தரப்படுகிறது, என நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், புதுச்சத்திரம், எருமப்பட்டி, பவித்திரம் மற்றும் மல்லசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் சின்ன வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சின்ன வெங்காயத்தின் விலை சரிந்துள்ளது. சில்லறை விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதிகபட்சமாக ரூ.20 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விலையில் இதைக்காட்டிலும் குறைவாக விற்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயி கள் அவற்றுக்கு உரியவிலை கிடைக்கும் வரை பாதுகாப்பாக வைக்க மானிய விலையில் வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைத்துத் தரப்படுகிறது.
இவற்றில் 6 மாத காலம் வரை வெங்காயத்தை பாதுகாப்பாக வைக்க முடியும். கடந்த ஓராண்டில் மட்டும் நாமக்கல் மாவட்டத்தில் ரூ.50.7 லட்சம் மானியத்தில் 109 விவசாயிகளுக்கு மொத்தம் 1,445 மெட்ரிக் டன் அளவு சின்ன வெங்காயம் சேமிப்புக் கிடங்குகள் அமைத்துத் தரப்பட்டுள்ளது. ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ரூ.87 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.
சேமிப்புக் கிடங்கு தேவைப்படும் விவசாயிகள் தோட்டக்கலைத் துறையை அணுகலாம், என்றனர்.