சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணமடைந்த லட்சுமி நாராயணனுடன் மருத்துவமனை டீன் தேரணிராஜன் மற்றும் மருத்துவர்கள் குழுவினர். 
தமிழகம்

செவித்திறன் பாதித்தவருக்கு கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மூளைக்கு அருகே இருந்த கட்டி கரைப்பு: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவித்திறன் பாதிப்பால் அனுமதிக்கப்பட்டவரின் மூளைக்கு அருகே இருந்த கட்டி மூன்று நாட்கள் நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் கரைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (35). இவரின் வலது காது உட்புறத்துக்கும் மூளைக்கும் இடையே உள்ள நரம்பில் ஏற்பட்ட கட்டியால் செவித்திறன் பாதிப்பால் 6 மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவரை நரம்பியல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். கட்டியின் அளவும் சிறியதாக இருந்ததாலும், மூளைக்கு அருகே கட்டி இருந்ததாலும், அவர் கதீர்வீச்சு சிகிச்சை துறைக்கு மாற்றப்பட்டார். அத்துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்துவிட்டு சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து, கதீர்வீச்சு சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் டி.என்.விஜய தலைமையில் மருத்துவர்கள் கிரிதரன், ஜீவா, நித்தியா மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர் காளியப்பன் குழுவினர் ‘ஸ்டீரியோடேக்டிவ் ரேடியோ’ என்ற நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் மூளைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் அருகே இருந்த சிறிய கட்டியை முழுவதுமாக கரைத்தனர் இந்த கதிர்வீச்சு சிகிச்சை அவருக்கு மூன்று நாட்கள் அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப்பின் முழுமையாக குணமடைந்த அவர் வீட்டுக்கு சென்றார். நவீன கதிர்வீச்சு சிகிச்சை மூலம் லட்சுமி நாராயணனனை குணப்படுத்திய மருத்துவர்கள் குழுவினரை மருத்துவமனை டீன் தேரணிராஜன் பாராட்டினார்.

இதுதொடர்பாக கதீர்வீச்சு சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் டி.என்.விஜய கூறும்போது, “இந்த சிகிச்சைக்குப்பின், லட்சுமி நாராயணனுக்கு சிகிச்சைக்குப்பின், அவருக்கு செவித்திறன் பாதிப்பு குணமடைந்தது. காதில் இருந்த இரைச்சலும் சரியானது. தனியார் மருத்துவமனையில் ரூ.4 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்பட்டது” என்றார்.

SCROLL FOR NEXT