தமிழகம்

கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வருகை: மலர் தூவி வரவேற்றார் அமைச்சர் நாசர்

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: சென்னை குடிநீருக்காக கடந்த 5-ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்டுவரும் கிருஷ்ணா நதி நீர் 152 கிமீ தொலைவில் உள்ள தமிழக எல்லையான, திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் ஜீரோ பாயின்டுக்கு நேற்று காலை 11 மணியளவில் வந்தடைந்தது.

அப்போது,விநாடிக்கு 172 கன அடி என வந்து கொண்டிருந்த கிருஷ்ணா நீரை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் மலர் தூவி வரவேற்றார்.

இந்நிகழ்வில், எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), ஆ.கிருஷ்ணசாமி (பூந்தமல்லி), துரை. சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) எஸ்.கோவிந்தராஜன், நீர்வளத் துறையின் கிருஷ்ணா நதி நீர் கோட்ட செயற்பொறியாளர் தில்லைக்கரசி, உதவி செயற்பொறியாளர் டி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட தமிழக – ஆந்திர நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் போது, செய்தியாளர்களிடம் அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்ததாவது: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை– தேர்வாய் கண்டிகை ஆகியவற்றின் மொத்த கொள்ளளவு 11.757 டிஎம்சி. தற்போது இந்த ஏரிகளில் 7.353 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நீரின் மூலம் அதன் நீர் இருப்பு அதிகரிக்கப்பட்டு, இந்த ஆண்டு சென்னையின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும், ஜீரோ பாயின்டுக்கு வந்துள்ள கிருஷ்ணா நீர், அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு இன்று காலை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT