கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் 10 கிலோ பான் மசாலா பொருட்கள் உணவுப் பாதுகாப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி நகரத்திற்குட்பட்ட மந்தைவெளி பகுதி, சங்கராபுரம் சாலை மற்றும் தியாகதுருகம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில், உண வகங்கள், பெட்டிக் கடைகள் மற்றும் மாம்பழ குடோன்களில்,கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பி.என்.தர் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மரு.சுதந்தன் தலைமையில், கள்ளக்குறிச்சி நகர உணவு பாதுகாப்பு பொறுப்பு அலுவலர் கதிரவன் ஆகியோர் கொண்ட குழு மூலம் திடீர் ஆய்வு மேற்கொள்ளப் பட்டன.
இந்த ஆய்வின்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த பெட்டிக்கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதமும், 10 கிலோ தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து, மாம்பழ குடோன்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் எத்திலின் மூலம் செயற்கை முறையில்பழுக்க வைக்கப்பட்டிருந்த சுமார் 40 கிலோ அளவிலான மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாடிக்கையாளர்களுக்கு உணவு மற்றும் உணவு பொருட்களை தரமானதாகவும், சுகாதாரமாகவும் வழங்குவதை உறுதி செய்திட வேண்டும் என உணவு பாதுகாப்பு அலுவலர்கள் வணிகர்களுக்கு தெரிவித்தனர்.