ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள அருந்ததியர் காலனி வீடுகளுக்கு பதிலாக, புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பூசேரி கிராமம் அருகே இடிந்து சேதமடைந்த நிலையில் காணப்படும் அருந்ததியர் காலனி வீடுகள். ராமநாதபுரம் மாவட்டம், முது குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது பூசேரி கிராமம். இக் கிராமத்துக்கு அருகில் அருந் ததியர் காலனி அமைந்துள்ளது. இங்கு 35 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயக் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர். இம்மக்களுக்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு அரசால் காலனி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
அந்த வீடுகள் அனைத்தும் தற்போது இடிந்து விழும் நிலையில் மோசமாக உள்ளன. இதனால் இக்காலனியைச்சேர்ந்த சிலர், வேறு கிராமங்களுக்குக் குடி பெயர்ந்து விட்டனர். வேறு வழியின்றி சேதம் குறைவாக இருக்கின்ற வீடுகளில் தங்கி சிலர் குடும்பம் நடத்தி வருகின்றனர். அந்த வீடுகளிலும், ஒரு வீட்டில் 4 குடும்பத்தினர் தங்கும் சிரமமான நிலை உள்ளது. காலனி வீடுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்தில், இம்மக்கள் இரவு நேரங்களில் வீட்டில் தூங்குவதை தவிர்த்து வருகின்றனர். எனவே அருந்ததியர் மக்களுக்கு புதிய காலனி வீடுகளை கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் முனியம்மாள் கூறும்போது, பூசேரியில் உள்ள அருந்ததியர் காலனி குடியிருப்புகள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. எப்போது இடிந்துவிழும் என்ற அச்சத்திலேயே வாழ்கின்றனர். எனவே புதிய வீடுகள் கட்டிக் கொடுக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறினார்.