கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் முடிந்த அளவு பகலில் வெளியேசெல்ல வேண்டாம் என சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சென்னை ஐஐடி உள்ளிட்ட சில மருத்துவக் கல்லூரிகளிலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, தற்போது குறைந்துள்ளது. இதற்கிடையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் மக்களுக்கு ஏற்பட்டு வருகின்றன.
இதுபோன்ற பிரச்சினைகளுடன் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், காய்ச்சலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பகலில்முடிந்த அளவு மக்கள் வெளியேசெல்ல வேண்டாம். வெயில் தாக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இதுபோன்ற பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புள்ளன.
இளநீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை அதிகம் பருக வேண்டும். குளிர்பானங்கள், வண்ணப் பவுடர்கலந்த மாமிசங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவரை அணுகி, உரிய சிகிச்சை பெற வேண்டும்” என்றனர்.