சென்னை: தமிழ்நாட்டிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அதிக தேசிய தரச் சான்றிதழ்கள் பெற்றதற்காக தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குஜராத் மாநிலத்தில் கேவாடியா டென்ட் சிட்டியில் நடைபெற்ற தேசிய அளவிலான சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
மாநாட்டில் பேசிய அவர், "மக்கள் அனைவருக்கும் உரிய மருத்துவம் குறைந்த செலவில் கிடைக்க வேண்டும். உரிய மருத்துவ சிகிச்சை எளிதில் கிடைக்க கூடியதாகவும் இருக்க வேண்டும். அதேவேளையில் அது அனைவருக்கும் சமமான அளவிலும் கிடைக்க வேண்டும். இவற்றைக் குறிக்கோளாகக் கொண்டு தமிழக அரசு திட்டங்களை வகுக்கிறது. அனைவருக்கும் நலவாழ்வு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது" என்றார்.
மேலும், மாநாட்டின்போது, மருத்துவத் துறையில் தமிழக அரசு பல திட்டங்களை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப ஆரம்ப சுகாதார நிலையங்கள் (ம) துணை சுகாதார நிலையங்களை அமைத்தல், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குதல், அனைவருக்கும் நலவாழ்வு என்ற இலக்கினை அடைந்திடும் வகையில் ஆயுஷ்மான் பாரத் நலவாழ்வு மையங்கள் அமைத்தல், போதிய மருத்துவ அலுவலர்கள், இடைநிலை சுகாதார பணியாளர்கள், பல்நோக்கு சுகாதார பணியாளர்கள் , ஆய்வக நுட்பனர்கள், தேவைக்கேற்ப மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பிற்கான கல்லூரிகளை நிறுவுதல், போதிய எண்ணிக்கையிலான இளநிலை மருத்துவ படிப்பு மற்றும் செவிலியர் படிப்பில் சேருவதற்கான இடங்களை உருவாக்குதல் மற்றும் பொது சுகாதார மேலாண்மைகான தனி இயக்குநரகத்தை செயல்படுத்துதல் ஆகியனவற்றில் தமிழக அரசு பல திட்டங்களை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்நாட்டிலுள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அதிக தேசிய தரச் சான்றிதழ்கள் பெற்றதற்காக தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.