சென்னை: திமுக ஆட்சியின் ஓராண்டு காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு குறித்து தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, "அதிமுக ஆட்சியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தத் திட்டங்களை மக்களுக்கு தெரிவிப்பது எனது கடமை. காவிரி பிரச்சினைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சி காலத்தில் 5,500 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டன.
பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகளுக்கு அதிக அளவு இழப்பீடு தொகை வழங்கியது அதிமுக அரசுதான். அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்வு திட்டம் மூலம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது. விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதிமுக அரசுதான் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியது . ஓராண்டு திமுக ஆட்சியில் புதிய திட்டங்களை செயல்படுத்தப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைத்தான் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போயுள்ளது" என்று தெரிவித்தார்.