தமிழகம்

பல்லக்கு சுமக்க அனுமதி அளிக்க வேண்டும்: கோட்டாட்சியரிடம் பல்லக்கு சுமப்பவர்கள் கோரிக்கை மனு

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன பட்டினப் பிரவேசத்தின்போது பல்லக்கு சுமக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு, பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோட்டாட்சியரிடம் பல்லக்கு சுமப்பவர்கள் நேற்று மனு அளித்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் பட்டினப் பிரவேசத்தின்போதுபல்லக்கு சுமப்பவர்கள், மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜியிடம் நேற்று அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தருமபுரம் ஆதீனத்தில் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்துபல்லக்கை சுமந்து பட்டினப்பிரவேசம் செல்வது எங்களின் பாரம்பரிய சமய உரிமை. எங்களின் உரிமையை யாருக்காகவும் விட்டுத்தர மாட்டோம். பல்லக்கை சுமப்பவர்களின் கருத்துகளை கேட்காமலேயே பட்டினப் பிரவேசத்தில் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதித்துள்ளது நியாயமற்றது.

கோடி நாட்டாமை

காலம் காலமாக தருமபுரம் ஆதீன திருமடத்தின் பகுதியைச் சேர்ந்த 72 பேர் சுயவிருப்பத்தின் பேரிலேயே பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில் பல்லக்கை சுமந்து செல்கிறோம். இவர்களில் 4 பேர்கோடி நாட்டாமை என அழைக்கப்படுகின்றனர். அவர்களின் மேற்பார்வையில் தற்போது பல்லக்கு தூக்கும் இளைஞர்களில் கல்லூரி மாணவர்களும், பட்டதாரிகளும் உள்ளனர்.

எங்களுக்கு கல்வி அறிவு, வீடு, நிலம் ஆகியவற்றை தருமபுரம் ஆதீனம் வழங்கியுள்ளது. எங்களை யாரும் கட்டாயப்படுத்தி பல்லக்கை சுமக்க சொல்லவில்லை. ஆன்மிகத்துக்கு எதிராக உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சிலர் அளித்த புகாரின்பேரில்,பட்டினப் பிரவேச நிகழ்ச்சியில்பல்லக்கை சுமந்து செல்ல தடைவிதித்ததை அறிந்து வருத்தப்படுகிறோம்.

இவ்விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, பட்டினப் பிரவேசத்தின்போது, பல்லக்கு சுமக்கும் நிகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT