சிதம்பரத்தில் நடந்த பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ். 
தமிழகம்

தமிழகத்தில் 2026-ல் பாமக ஆட்சி அமைவது உறுதி: சிதம்பரம் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கருத்து

செய்திப்பிரிவு

கடலூர்: பாமகவினர் மாவட்ட வாரியாக பொதுக் குழு கூட்டங்களை நடத்திவருகின்றனர். கடலூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது. இதில், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: ‘ஒருமுறை பாமகவுக்கு ஓட்டுபோடலாம்’ என்ற எண்ணம் மக்களிடத்தில் வரத் தொடங்கியிருக்கிறது. எந்தப் பிரச்சினை இருந்தாலும், ‘அவர்கள் (பாமகவினர்) போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்; களத்தில் இருக்கிறார்கள்’ என்று மக்கள் எண்ணுகின்றனர். 2026-ல் எந்தக் கட்சி எவ்வளவு கொடுத்தாலும் அது எடுபடாது. மக்கள் நமக்குதான் ஓட்டு போடுவார்கள்.

நம் ஆட்சியில் நாம் போடும் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்குக்குதான். அதைச் செய்யவில்லை என்றால் அடுத்த தலைமுறையை நல்ல தலைமுறையாக நாம் பார்க்க முடியாது. பள்ளி மாணவிகள் குடித்துவிட்டு ஆடும் நிலை தமிழகத்தில் உள்ளது.

நான் செய்த மிகப்பெரிய சாதனையாக பார்ப்பது காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வைத்ததுதான். இதையெல்லாம் மக்களிடம் எடுத்து செல்லுங்கள்.

புதிய வியூகங்களுடன் ‘பிஎம்கே 2.0’ ஐ தொடங்கியுள்ளோம். 2016-ல்‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’என்று நீங்கள் பார்த்ததைவிட இது20 மடங்கு அதிகமாக இருக்கும்.நமக்கு நல்ல அரசியல் சூழல் உள்ளது. மக்கள் இரு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் உள்ளனர். இனி திமுக, அதிமுக ஆட்சிக்கு வர முடியாது. நாம் இந்த இடத்தை பிடிக்கவில்லை என்றால் வேறு யாராவது பிடித்துவிடுவார்கள். இதுபோல அரசியல்களம் இனிமேல் வராது. தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம். இதன் அடித்தளம்தான் இந்த பொதுக்குழு என்று கூறினார்.

தொடர்ந்து மாலையில் கடலூரிலும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்நிகழ்வுகளில் முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து ஜெகன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்பொதுக்குழுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தமிழக சட்டப்பேரவையில் வன்னியர்களுக்கான 10.5 உள்ஒதுக்கீடு இடஒதுக்கீட்டை நிறைவேற்றி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT