மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனத்தில் மே 22-ல் நடைபெற உள்ள பட்டினப் பிரவேசத்தில், ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச்சென்று வீதியுலா வர, மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்தப் பிரச்சினை தொடர்பாக சட்டப்பேரவையிலும் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதில், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நல்ல முடிவு வரும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்நிலையில், குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கட்டளை மடத்தில் தங்கியுள்ள தருமபுர ஆதீனம்27-வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிகஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை, மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில், உளவுத் துறை இன்ஸ்பெக்டர் சதீஷ், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பல்லக்கு வீதியுலாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுக்கு முதல்வர் சுமுகமான முடிவை எடுக்கும் வாய்ப்புள்ளதால், போராட்டங்கள் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதீனகர்த்தர், “அரசின் நல்ல முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். தருமபுரம் ஆதீனம் சார்பில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடவில்லை. வெளியில் நடைபெறும் போராட்டத்துக்கு நாங்கள் பொறுப்பு அல்ல” என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ஆதீனத்தை பல்லக்கில் வைத்து வீதியுலா செல்லும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், ஆதீனகர்த்தரை காவல் துறையினர் சந்தித்து பேசிய நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.