கோவை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘உங்கள் குரல் - தெரு விழா’ நிகழ்ச்சி பொள்ளாச்சி நகராட்சியில் நாளை நடைபெறுகிறது.
பொதுமக்கள் தங்கள் வாழும் பகுதியில் நிலவும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக, அந்தந்த பகுதி உள்ளாட்சி பிரதிநிதிகளின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வாய்ப்பு ஏற்படுத்தி தந்துள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதி பிரச்சினைகள் தொடர்பாக தொலைபேசி மூலம் தெரிவிப்பதற்காக ‘உங்கள் குரல்’ என்ற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ‘உங்கள் குரல்’ வசதி மூலம் தெரிவித்த பிரச்சினைகள் மற்றும் பொதுமக்கள் எழுப்பிய கேள்விகள் தொடர்பாக நகர்மன்றத் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன் பொதுமக்களுடன் நாளை கலந்துரையாடுகிறார்.
இதற்கான நிகழ்ச்சி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பார்க் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.