திருவண்ணாமலை: செய்யாறு அருகே சாலை விபத்தில் சிக்கிய 2 மாணவர்களால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பாராசூர் கிராமத்தில் வசிப்பவர்கள் சதீஷ், விஜய் மற்றும் அபிஷேக். இவர்கள் மூவரும், அதே கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர்.
இந்நிலையில் கொருக்கை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடைபெற்ற பொதுத்தேர்வை எழுதுவதற்காக இரு சக்கர வாகனத்தில் 3 மாணவர்களும் சென்றுள்ளனர். செய்யாறு - கொருக்காத்தூர் சாலையில் தாண்டுகுளம் பகுதியில் சென்றபோது, சாலையோரம் நின்றிருந்த எழில் என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது.
இந்த விபத்தில் 3 மாணவர்கள் உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும், செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காயத்தின் தன்மை குறைவாக இருந்ததால் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தேர்வு எழுத அபிஷேக் புறப்பட்டு சென்றார். சதீஷ் மற்றும் விஜய் ஆகியோர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், அவர்கள் தேர்வு எழுதவில்லை. மேலும் எழிலும் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செய்யாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.