புதுக்கோட்டை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றியச் செயலாளர் சொக்கலிங்கம், அவரது மனைவி கங்கையம்மாள் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் நேற்று சாலை மறியல் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள கருப்பட்டிபட்டியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர். இவரது மனைவி கங்கையம்மாள். இவர், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர். இருவரும் தங்கள் பகுதி பிரச்சினை தொடர்பாக அமைச்சர் சி.விஜயபாஸ்கரை அவரது வீட்டில் கடந்த ஆண்டு சந்தித்தபோது, இவர்களை ஜாதி பெயரைக்கூறி அமைச்சர் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால், அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சொக்க லிங்கத்தின் ஆதரவாளர்கள் போராட்டங் களில் ஈடுபட்டனர். இதையடுத்து கணவன், மனைவி இருவரையும் கட்சியில் இருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நீக்கினார்.
இந்நிலையில் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து சொக்கலிங்கம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். புதுக்கோட்டை தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பாளர்கள் இறுதி செய்யும் கூட்டத்தில் கலந்துகொண்ட சொக்கலிங்கம், தனக்கு ரம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டதற்கான உத்தரவைப் பெற்றுக்கொண்டு தனது மனைவி உள்ளிட்டோருடன் அன்றிரவு காரில் ஊருக்குப் புறப்பட்டுள்ளார்.
செம்பட்டிவிடுதி அருகே சென்றபோது, சாலையோரம் திரண்டிருந்த சிலர் காரை மறித்து சொக்கலிங்கம், கங்கை யம்மாளை தாக்கியுள்ளனர். காரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, இருவரையும் தாக்கிய அதிமுக ஒன்றியச் செயலாளர் சரவணன் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சொக்கலிங்கத்தின் ஆதரவாளர்கள், புதுக்கோட்டையிலிருந்து வடவாளம் வழியாக கறம்பக்குடி செல்லும் சாலை, செம்பட்டிவிடுதியில் இருந்து ஆலங்குடி செல்லும் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்களை வெட்டிச் சாய்த்து, தடுப்புகளை ஏற்படுத்தினர். இதனால், அவ்வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும், இந்த தாக்குதலைக் கண்டித்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே முத்தரையர் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், புதுக்கோட்டை நகரிலும் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமனி, சார் ஆட்சியர் எஸ்.பி.அம்ரித் ஆகியோர் மறியலில் ஈடுபட்டோரிடம், சொக்கலிங்கம் உள்ளிட்டோரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.
இந்நிலையில், சொக்கலிங்கத்தின் ஆதரவாளரான மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமான 6 ஏக்கரில் பயிரிட்டிருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான கரும்பு தோட்டம் நேற்று தீக்கிரையானது. சொக்க லிங்கத்தை தாக்கியவர்கள் தரப்பினர் தீ வைத்திருக்க வாய்ப்பு உள்ளதாக ஆலங்குடி காவல் நிலையத்தில் சுப்பிர மணியன் புகார் தெரிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே சுயேச்சை வேட்பாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
4 பேர் கைது
இந்நிலையில், சொக்கலிங்கம், கங்கையம்மாள் ஆகியோரைத் தாக்கிய தாக செம்பட்டிவிடுதியைச் சேர்ந்த அரசு(20), செல்வக்குமார்(20), சிலம்பரசன்(19), விஜயகுமார்(20) ஆகிய 4 பேரை செம்பட்டிவிடுதி போலீஸார் நேற்று கைது செய்தனர்.