கோவை: நீலகிரி மாவட்டம் கக்குச்சி கிராமத்தை சேர்ந்தவர் ரகு (31).அரசுப் பேருந்து ஓட்டுநரான இவர், தற்போது கோவை நீலாம்பூரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கோவை காந்திபுரம்-பெரியநாயக்கன்பாளையம் இடையிலான அரசுப் பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.
பேருந்து துடியலூரை அடுத்த ஜி.என்.மில்ஸ் அருகே வந்தபோது முன்னால் சென்ற டாக்ஸி மீது மோதியுள்ளது. இதையடுத்து டாக்ஸியில் இருந்து இறங்கி வந்தவர்கள் ரகுவிடம் பேசியபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் டாக்ஸி ஓட்டுநர் மற்றும் அரசுப் பேருந்து ஓட்டுநரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரகுவை பொதுமக்கள் பிடித்து துடியலூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறும்போது, “ரகு மீதான விசாரணை முடியும்வரை அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது” என்றனர். துடியலூர் போலீஸார் ரகு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.