அனைவருக்கும் பொதுவான அரசாக அதிமுக அரசு செயல்பட வேண்டுமென திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. முதல்வருக்கும், அவருடன் பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
கடந்த தேர்தலில் திமுகவுக்கு 23 எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், தற்போது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 89 எம்எல்ஏக்கள் கொண்டு பலமான எதிர்க்கட்சியாக அமைத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சியினருக்கும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களது கடமைகளை செய்ய வேண்டுமென்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. தேர்தலுக்கு பின்பு ஆட்சி அமைத்த பின்னர், மக்கள் அனைவரும் பொதுவானவர்களே என்பதே என நினைவில் கொண்டு அதிமுக அரசு செயல்பட வேண்டும்'' என்று வீர்மணி கூறியுள்ளார்.