ராயபுரம் பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள். 
தமிழகம்

சுவர் விளம்பரம் தொடர்பான தகராறு; ஓவியங்கள் வரைந்து மோதலுக்கு முற்றுப்புள்ளி: பிரச்சினைக்கு உடனடி தீர்வுகண்ட காவல் துறை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ராயபுரம் 53-வது வார்டுக்கு உட்பட்ட டாக்டர் வி.ஆர். சாலையில் உள்ள பார்த்தசாரதி மேம்பாலத்தின் பக்கவாட்டில் இரு தரப்பினரிடையே சுவர் விளம்பரம் செய்வதில் அண்மையில் மோதல் ஏற்பட்டது.

ஒரு தரப்பினரின் சுவர் விளம்பரத்தை மற்றொரு தரப்பினர் அழித்து, தங்களது விளம்பரத்தை அதில் வரைந்தனர். இதனால், இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, அசம்பாவிதம் ஏற்படும் சூழல் நிலவியது.

இதையறிந்த, வடசென்னை காவல் இணை ஆணையர் ஆர்.வி.ரம்யா பாரதி உடனடியாக அங்கு சென்று, சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டார்.

இதையடுத்து, சுவர் விளம்பரப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண முடிவு செய்தார். அதன்படி, முதல்கட்டமாக சென்னை மாநகராட்சியின் வட்டார துணை ஆணையர் (வடக்கு) சிவகுருவை தொடர்புகொண்டு பேசினார். மோதலுக்குக் காரணமான மேம்பால பக்கவாட்டுப் பகுதியில் கலாச்சார ஓவியங்கள் வரைய முடிவு செய்யப்பட்டது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சுவரில் வரையப்பட்டிருந்த விளம்பரங்கள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அழிக்கப்பட்டு, அந்த சுவரில் விவசாயி காளையை ஓட்டிச் செல்வது, ஏரியில் படகு பயணிப்பது, இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்தும் ஓவியம், குடும்ப உறவைவலியுறுத்தும் ஓவியம் என அடுத்தடுத்து 7 வண்ணமிகு கலாச்சார ஓவியங்கள் வரையப்பட்டன.

இதனால், சுவர் ரம்மியமாக காட்சி அளிப்பதுடன், விளம்பர மோதலுக்கு நிரந்த முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக காவல் இணை ஆணையர் ரம்யா பாரதிதெரிவித்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஒருங்கிணைந்து, ஒரு மணி நேரத்தில் சுவர்விளம்பரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைத்துள்ளது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT