திருத்தணி/திருக்கழுக்குன்றம்: திருத்தணி முருகன் கோயில், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்களில் சித்திரை பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா நேற்று அதிகாலை நடைபெற்றது. தங்க, வைர ஆபரணங்கள் மற்றும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமி வீற்றிருக்க, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி கம்பத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
இவ்விழாவில், நேற்று மாலை சுப்பிரமணிய சுவாமி கேடயத்தில் உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா வரும் 11-ம் தேதி இரவும், தெய்வானை திருக்கல்யாணம் 12-ம் தேதி இரவும், கதம்ப பொடி விழா 13-ம் தேதி இரவும், தீர்த்தவாரி 14-ம் தேதி காலையும் நடைபெற உள்ளன என, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வேதகிரீஸ்வரர் கோயில்
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரரர் மலைக்கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று அதிகாலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் நடைபெற்றது.
இதையடுத்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன் உற்சவர் மற்றும் விநாயகப் பெருமான், திரிபுர சுந்தரி அம்பாள் ஆகியோர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேலும், முக்கிய வீதிகளில் உலா நடைபெற்றது.தொடர்ந்து வரும் 7-ம் தேதி 63 நாயன்மார்கள் உற்சவம், 9-ம் தேதி கதலி விருட்சம் உற்சவம், 11-ம் தேதி பஞ்சரத உற்சவம், 14-ம் தேதி இராவணேஸ்வரர் உற்சவம் நடைபெற உள்ளன.