ஆவடி: ஆவடி அருகே பருத்திப்பட்டு, அசோக் நிரஞ்சன் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த வளாகத்தை பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தில், அய்யன்குளம் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (28) உள்ளிட்டவர்கள் பணிபுரிந்து வந்தனர்.
இந்நிலையில், முத்துக்குமார் நேற்று முன்தினம், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, தொட்டியில் இருந்த விஷவாயுவை சுவாசித்ததால் முத்துக்குமார் மூச்சுத் திணறி, தொட்டியினுள்ளே விழுந்தார்.
இதைப் பார்த்த ஒப்பந்த நிறுவன மேலாளரான குணசேகரன் (44), கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கி, முத்துக்குமாரை மீட்க முயன்றுள்ளார். அப்போது அவரும் தொட்டிக்குள் மயங்கி விழுந்தார்.
உடனே, சக ஊழியர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி, முத்துக்குமார், குணசேகரன் ஆகியோரை மீட்டு, ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில், முத்துக்குமார் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
முதலுதவி சிகிச்சை பெற்ற குணசேகரன், மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து, ஆவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமுல்லைவாயல் பகுதியில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.