மதுரை: மதுரை புறநகர் மாவட்டங்களில் திமுக சார்பில் நகர், பேரூர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலில் மனுக்கள் பெறப்பட்டன. திருமங்கலம், உசிலம்பட்டி நகர் செயலாளர்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியா கியுள்ளது.
திமுக கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான 15-வது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பேரூர், நகர் செயலாளர்கள் தேர்வு நடக்கிறது. இதற்கான மனுக்கள் நேற்று பெறப்பட்டன. போட்டி இருந்தால் 8-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிவெடுக்க கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. எனினும் போட்டியை தவிர்த்து சுமூகமாக பேசி நிர்வாகிகளை ஏகமனதாக தேர்வு செய்ய கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. மாவட்ட வாரியாக தேர்தலை நடத்த மேலிட நிர்வாகிகள் அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மனுக்களை பெற்றனர். மதுரை புறநகர் வடக்கு, தெற்கு மாவட்டங்களில் முன்னாள் மத்திய அமைச்சர் காந்திசெல்வன் மனுக்களை பெற்றார். தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணி மாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி, திருமங்கலம் நகராட்சிகள் மற்றும் எழுமலை, பேரையூர், டி.கல்லுப்பட்டி ஆகிய பேரூராட்சிகள் மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தில் உள்ளன. இங்கு செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிடுவோரி டமிருந்து மனுக்களை கட்சியின் மேலிட பிரதிநிதி முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் திருமங்கலத்தில் பெற்றார்.
இம்மாவட்ட நிர்வாகிகள் தேர்வு குறித்து கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறியது:
திருமங்கலம், உசிலம்பட்டி நகராட்சி தலைவர்கள் தேர்வு தொடர் பாக எழுந்த பிரச்சினையில் இந்த 2 நகர் செயலாளர்கள் பதவி பறிக்கப்பட்டது. தற்போது மனுக்களை பெற்றாலும் மாவட்ட செயலாளர் பரிந்துரையை மீறி புதிதாக யாரும் போட்டியிட்டு பொறுப்புக்கு வந்துவிட முடியாது. போட்டியை தவிர்க்க கட்சி தலைமை வலியுறுத்தியுள்ளது.
இதையடுத்து தற்போது பேரூர் திமுக செயலாளர் களாக உள்ள எழுமலை-ஜெயராமன், பேரையூர்-பாஸ்கரன், டி.கல்லுப்பட்டி-முத்து கணேஷ் ஆகியோர் மீண்டும் தேர்வாகின்றனர்.
திருமங்கலம் நகர் செயலாள ராக இருந்த முருகன் பதவி பறிக்கப்பட்டதால், புதிய நகர் செயலாளராக தர், உசிலம்பட்டி நகர் செயலாளராக இருந்த தங்க மலைப்பாண்டியின் பதவி பறிக்கப்பட்டதால், புதிய நகர் செயலாளர் தங்கபாண்டியும் தேர்வாகும் சூழல் உள்ளது. உசிலம்பட்டியில் நிர்வாகிகளிடம் தொடர் பேச்சுவார்த்தை நடக்கிறது.
புறநகர் வடக்கு மாவட்டத்தில் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, வள்ளாளபட்டி பேரூராட்சிகள், மேலூர் நகராட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இந்த பகுதிகளில் போட்டி யிடுவோரிடமிருந்து காந்தி செல்வன் நேற்று மனுக்களை பெற்றார்.
இம்மாவட்டத்தில் தேர்தல் நடக்காமல் ஏகமனதாக தேர்வு செய்ய அமைச்சரும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான பி.மூர்த்தி தலைமையில் நிர் வாகிகள் பேசி சுமூகமாக முடிவு செய்துவிட்டனர், என கட்சியினர் தெரிவித்தனர்.